தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பேருந்து நிலையம் அருகில் பிரஸ் கிளப் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில கவுரவத் தலைவர் எம்.பி.ராமன் தலைமைத் தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஃபாரூக் முன்னிலை வைத்தார்.
இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன், “பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக வாக்குறுதியை அளித்து வெற்றிபெற்றார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. அதன் பின்னர் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு ஓராண்டுக்காலம் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். அதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற்று ஓராண்டுக்காலம் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதாரவிலைக்கான அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில், வருகிற மார்ச் ஒன்றாம் தேதி தமிழக அனைத்து விவசாயிகள் குமரி முதல் டெல்லி வரை மத்திய அரசிடம் நீதி கேட்டு நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வோம். இதில், பயணம் செல்லும் வழியில் உள்ள 12 மாநில முதல்வர்களைச் சந்திக்க இருக்கின்றோம். அதேபோன்று, தமிழக முதலமைச்சரும் தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்குவதாகத் தெரிவித்தார். ஆனால், இன்றைய தினம் வரை வழங்கவில்லை. தற்போது மூன்றாவது பருவ நெல் கொள்முதல் தொடங்கி இருக்கின்றது. ஆகவே, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்” எனத் தெரிவித்தார்.