கஜா புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான புஷ்பவனம் இன்னும் இயல்புநிலைக்கு வரவில்லை. இதற்கிடையில் அந்த பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் இரண்டாவது அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதற்கு கடுமையான எதிர்ப்பு மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும்,விவசாயிகளிடமும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள் விவசாய சங்கத்தினர். அதோடு டெல்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றவும் தயாராக உள்ளனர்.
இந்த சூழலில் ஹைட்ரோகார்பன் குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.ஆர். பாண்டியன் விவசாயிகளோடு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கடற்கரை கிராமத்திற்கு சென்றவர் செய்தியாளர்களிடம் பேசினார். "திருக்காரவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் கடலூர் முதல் கோடியக்காடு வரை கடல் பகுதி முழுவதும் பேரழிவு ஏற்பட உள்ளது. மீன் பிடி உரிமை பறிபோகும், வாழ்வாதாரம் அழியும் என்றும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து மீனவர்களும் விவசாயிகளோடு இணைந்து போராட வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த துயரில் இருந்து மீளவில்லை. சுமார் 70 நாட்களுக்கு மேலாகியும் மீன் பிடிக்க செல்லவில்லை. வருவாய் இழந்து முடங்கி கிடக்கின்றனர். மிகுந்த மீளாத் துயரத்தில் உள்ளனர். கடல் சேற்றால், படகுகள் புதையுண்டு கிடக்கிறது. இது வரையில் மறுசீரமைப்பு பணிகள் துவங்கவேயில்லை. 10க்கும் மேற்பட்ட மண் அகற்றும் இயந்திரங்கள் நிறுத்திய நிலையில் உள்ளது. முதலமைச்சர் உடன் தலையிட்டு அவசரக்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.