“தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை டிஐஜி விஜயகுமார் அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை டிஐஜி விஜயகுமார் இறப்பு குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காவல்துறையில் கோவை சரக டிஐஜியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் துணிவோடும் செயல்படும் பண்புமிக்கவர். விளம்பரம் இல்லாமல் தன்னடக்கத்துடன் அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடன் பணிவுடன் பழகும் உயர்ந்த மனம் கொண்டவர்.
தேனி மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார். தேனி மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகளுக்காக நான் தேனி பகுதி சென்று திரும்பும்போதெல்லாம் பிரச்சனைகள் குறித்து என்னோடு தொலைபேசியில் விவாதிப்பார். தான் பிறந்த மண்ணின் மீதும் முல்லைப் பெரியாறு அணை மீதும் அளவற்ற மோகம் கொண்டவர்.
இரண்டு முறை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி என்கிற புகழை அனைவரிடத்திலும் பெற்றவர். இவரது மறைவு காவல் துறையில் பேரிழப்பாகும். அதுமட்டுமின்றி காவல்துறையில் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் அடிமட்ட காவலர்கள் துவங்கி உயர்மட்ட அதிகாரிகள் வரையிலும் தொடர்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு இவரது மரணம் வழிகாட்டுதலாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.