சென்னையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின் வினியோகம் பாதிக்கப்பட்டு மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையத்தின் முக்கிய யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சென்னையில் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 10.15 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
அதன்படி மணலி, மின்ட் சாலை, வேளச்சேரி, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கொளத்தூர், ஓட்டேரி, அயனாவரம், பட்டாளம், மதுரவாயல், புரசைவாக்கம், மந்தைவெளி, தி. நகர், பெரம்பூர், உள்ளிட்ட இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. அதே போன்று சூளைமேடு, மயிலாப்பூர், கோடம்பாக்கம், கோட்டூர்புரம், ராயபுரம் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் மின்தடை சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் சீராகும் எனத் தமிழக மின்துறைத் தலைவர் ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.