தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி. இன்று (15/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு, சென்னை, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கணினி வழி குற்றப்பிரிவில் வலைதளம் மூலம் 'பவர் பேங்க்' என்ற செயலியில் பண முதலீடு செய்து பாதிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 'பவர் பேங்க்' என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. இது நேரடியாக பொதுமக்களைக் குறைந்த காலத்திற்குள் இரண்டு மடங்கு பணம் தருவதாக ஏமாற்றும் வகையில், செயல்படுகிறது. இதன் மூலம் அதிக மக்கள் ஏமாற்றப்பட்டு பல மாநிலங்களில் இந்த 'பவர் பேங்க்' செயலி சம்பந்தமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 'பவர் பேங்க்' சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்கள் யாராவது இருந்தால் விசாரணை அதிகாரி A.வசந்தி, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை, கணினி வழி குற்றப்பிரிவு, சென்னை என்பவரை தொலைபேசி எண் 94441-28512 மற்றும் மின் அஞ்சல் முகவரி cbcyber@nic.in மூலம் அணுகவும்.
மேலும் மின் அஞ்சல் மற்றும் விசாரணை அதிகாரியின் அலுவலக முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவல் ஆய்வாளர், கணினி வழி குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத் துறை, எண்.220, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை- 08, தமிழ்நாடு என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக புகார் அளிக்கலாம்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.