தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 44 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்தான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனையில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட ஆறு இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாகப் பேசவோ கூடாது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது. லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் பல்வேறு வகையான உத்தரவுகளை விதித்துள்ளார்.
மேலும், பேரணியில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, முதலுதவி, ஆம்புலன்ஸ், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் செய்து தர வேண்டும். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை செலுத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட உத்தரவுகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி நிபந்தனை உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதனால் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.