தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜு, மாநில துணைத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘40 வருடங்களாக அஞ்சல் துறையில் பணி செய்து தற்போது ஓய்வு பெற்றுள்ள தங்களுக்கு உடலில் ஏற்படும் நோய்களுக்கு சரிசெய்வதற்கு கூட கையில் காசு இல்லை. அன்று பணியில் இருந்தபோது 20 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் சென்று வந்ததால் இப்போது மூட்டு தேய்மானம் நோய் ஏற்பட்டு நடக்க கூட முடியாமல் மருத்துவ உதவி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களின் நிலைமையை மத்திய அஞ்சல்துறை பரிசீலனை செய்து எங்களுக்கு குறைந்தபட்ச சேமநல உதவியை மாதம்தோறும் வழங்வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.
மேலும், கோரிக்கையை அரசு ஏற்க மறுக்கும் நிலையில் தமிழக கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கம் சார்பில் வரும் ஜூன் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். கூட்டத்திற்கு முசிறி, பெரம்பலூர், துறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய கோட்டங்களில் பணி செய்து ஓய்வு பெற்ற சுமார் 100க்கும் மேற்பட்ட அஞ்சலக கிராமிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.