விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அ.ம.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரோடு அ.ம.மு.க கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் காளிமுத்து, சந்தோஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது பேசிய டி.டி.வி. தினகரன், “பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும். அவர் கட்சியின் தலைவர். அதனால், இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார். தி.மு.க. வின் 2வது ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை. ஓ. பன்னீர்செல்வத்துடனான எனது சந்திப்பு நடந்ததே இனிவரும் காலங்களில் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான்.
அதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் தேர்தலைச் சந்திப்போம். இனிவரும் காலங்களில் அனைத்து நிகழ்வுகளிலும் சேர்ந்தேதான் பயணிப்போம். நான் என்.டி.ஏ. கூட்டணியில் இல்லை. அதனால், பா.ஜ.க மாநிலத் தலைவரின் நடைபயணத்திற்கு என்னை அழைக்காததைப் பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க கட்சியின் நிலைப்பாடு குறித்து வருகிற டிசம்பரில் தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.