Skip to main content

அடுத்தகட்டத்திற்கு தயாராகும் பொற்பனைக்கோட்டை; துவக்கி வைக்க இருக்கும் முதல்வர் 

Published on 17/06/2024 | Edited on 17/06/2024

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை களில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தளம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குநராகக் கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர்.

அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடு செங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் (18/06/2024) செவ்வாய்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொள்கின்றனர்.

இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

சார்ந்த செய்திகள்