பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (06/05/2022) காலை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய 'THE LURKING HYDRA' என்ற புத்தகம் சிறந்த ஆவணமாக இருக்கும். இந்திய ராணுவத்தின் சிறப்பு குறித்த புத்தகம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை, அரசியல்- மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். நாட்டை சீர்குலைப்பதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நோக்கம். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுகிறது.
அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுவதை ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள்" என்று கூறியுள்ளார்.