பூந்தமல்லியில் கரோனா உறுதியான நபரின் வீட்டுக்குச் சென்று தாயக்கட்டை விளையாடியவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது. இதில் 180 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை பூந்தமல்லியில் 6- வது வார்டில் இரண்டு நாளுக்கு முன் 39 வயது மதிக்கத்தக்க தனியார் நிறுவன ஊழியருக்கு கரோனா உறுதியானது. கரோனா உறுதியான நபரின் வீட்டுக்குச் சென்று எதிர்வீட்டை சேர்ந்த நபர் தாயக்கட்டை விளையாடினார். தாயக்கட்டை விளையாடியதில் எதிர்வீட்டில் வசிக்கும் நபருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. பூந்தமல்லியில் முதல் நபருக்கே கரோனா எப்படி வந்தது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பூந்தமல்லியில் இரண்டு பேருக்கு கரோனா உறுதியானதால் 5 கி.மீ. தொலைவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.