Skip to main content

குளம் அறிவோம்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
pool


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தில் நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ‘குளம் அறிவோம்’’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
 

அந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கெடுத்துக்கொண்டனர். அந்தூர் கிராமத்தின் நடுப் பகுதியில் மழைநீரை சேமித்து குடிக்கமட்டும் பயன்படுத்தும் வகையில் வரத்தான் குளம் என்றொரு குளம் உள்ளது. இக்குளத்திற்கு வெள்ளைக் கற்கள் கொண்டு சுற்றுச்சுவரும், படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளது. 
 

இந்த குளத்திற்கு தண்ணீரானது புறங்குட்டை வழியாக இரண்டு வரத்து வாய்க்கால்கள் மூலம், வயல்வெளிகளில் பெய்கின்ற நீரானது ஓடிவந்து சேரும். பின்னர் நீரில் உள்ள தூசுகள், மண் ஆகியவை புறங்குட்டையில் படிந்த பின் வரத்தான் குளத்தில் சேரும் வகையில் இரண்டு குளங்களும் அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. 
 

 

 

மாணவர்கள் இந்த குளங்களுக்கு அழைத்து வரப்பட்டு குளத்தின் கட்டமைப்பு, வரத்து வழிகள், நீர் நிறைந்த பின் வழிந்து ஓடும் வடிகால் ஓடை ஆகியவற்றை பார்த்தனர். ஊரின் மேற்கில் புது ஏரி, மன்னார்குளம், ஓலைப்பாடியான் குளம் ஆகியவை அமைந்து உள்ளன. மேலும்,ரெட்டை ஏரி, தைலான் குளம், கிளியூர் ஏரி, படையாச்சி குளம், மாமரத்துக்குட்டை என பல குளங்கள் சிறியதாகவும், பெரியதாகவும் உள்ளன. 
 

அந்தூர் பகுதி பழங்காலத்தில் கடலாக இருந்த பகுதியானதால் சுண்ணாம்பு மிகுதியாக இருக்கும். எனவே மழை நீரை முறையாக சேமித்து வைக்க பல்வேறு குளங்கள், பல்வேறு காலங்களில் வெட்டப்பட்டு இருக்கின்றது. தற்போது இவ்வூருக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் செயற்கை முறையில் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு 20 லிட்டர் தண்ணீர் பத்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
 


இதுபோன்ற நவீன முறைகள் வரும் முன்னே மக்கள் மழைநீரை முறையாக சேமித்து, பாதுகாத்து, குடிநீராக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தற்காலத்து மக்களுக்கு குழாய்கள் மூலம் வெளியிலிருந்து நீர் கொண்டுவரப்படுவதால், தங்களைச் சுற்றியுள்ள ஏரி, குளங்களை புறந்தள்ளி அழிய விட்டு விடுகின்றனர். இளைய சமுதயாத்தை நேரிடையாக அழைத்ததுச்சென்று விளக்கிக் கூறினால்தான் இனி வருங்காலங்களில் நீர்நிலைகளை குறித்த புரிதலை ஏற்படுத்த முடியும்.
 

நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஊர்மக்களால் பனைவிதைகள் விதைக்கப்பட்டது. மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பைகள் பயன்படுத்துவது, சீமைக் கருவேலமரங்களை நீக்கி நாட்டு மரங்கள் நடுவது குறித்தும் உறுதிமொழி ஏற்றனர். 

 

 


நிகழ்வின் இறுதியில் இயற்கை பானகம், கடலைமிட்டாய் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர் அந்தூர் ஜெகதீசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். சூழலியல் செயற்பட்டாளர் இரமேசு கருப்பையா நீர்நிலைகளின் மேலாண்மை குறித்து விளக்கி கூறினார்.  
 

 

 

 


 

சார்ந்த செய்திகள்