தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 16 ந் தேதி சுயேட்சை வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவர் சார்ந்துள்ள சமூகப் பெண்கள் பற்றி இழிவாக பேசிய ஆடியோ ஒன்று பரவியது. அந்த ஆடியோவால் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தொடங்கி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை போலிசார் 5 தனிப்படைகள் அமைத்து ஆடியோ வெளியிட்டவர்களையும் அதை பரப்பியவர்களையும் தேடி வந்தனர். ஆனால் எங்கிருந்து ஆடியோ வெளியிடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க வாட்ஸ் அப் நிறுவனத்தின் உதவியை போலிசார் நாடினார்கள்.
இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஆடியோ வெளியிடப்பட்டது என்பதை அறிந்து சிங்கப்பூரில் இருந்த பட்டுக்கோட்டை கரிசல்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரை இந்திய தூதரகம் மூலம் பிடித்து சென்னை க்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும். அவரை விமான நிலையத்தில் காத்திருக்க வைத்தனர். பின்னர் பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான விசாரணைக் குழுவினர் செல்வகுமாரை அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதன் அடிப்படையில் பட்டுக்கோட்டை பள்ளிகெண்டான் வசந்த் என்பவரையும் கைது சென்று அன்றே சிறையில் அடைத்தனர்.
அதன் பிறகு செல்வகுமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆடியோவில் பேசிய நபர்களில் ஒருவரான வாராப்பூர் நெரிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்கிற சத்தியராஜை சிங்கப்பூரில் இரந்து வரவைத்து திருச்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஆடியோக்களை தமிழ்நாட்டில் பரப்பியதாக தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் உள்பட 2 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அன்றே சிங்கப்பூரில் இருந்து ஆடியோவை வெளியில் பரப்பிவிட இந்தியா சிம் கார்டு கொடுத்து வாட்ஸ் அப் கணக்கு தொடங்க கொடுத்த கீரனூர் மோசக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கையன் என்பரையும் சிங்கப்பூரில் இருந்து வரவைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று ஆடியோவில் பேசியதாக செல்வகுமார் கொடுத்த வாக்குமூலத்தில் அடையாளம் காணப்பட்ட சித்தன்னவாசல் முருகேசன் என்பரை சிங்கப்பூரில் இருந்து வரவைக்கப்பட்டு புதுக்கோட்டை பொன்னமராவதி போலிசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இன்று மாலை முருகேசன் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக ஆடியோக்களை வெளியில் அனுப்பியதாக கூறப்படும் தஞ்சை மாவட்டத்தைச் சேரந்த ஒரு இளைஞரையும் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரும் முயற்சி நடக்கிறது. இன்று அல்லது நாளை அவரும் வரவழைக்கப்பட்டு கைது செய்யப்படலாம். மேலும் இது சம்மந்தமாக தமிழ்நாட்டில் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.