ரூபாய் ஒரு கோடிக்கு விலை பேசப்பட்ட முருகன் ஐம்பொன் சிலையை சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் அதிரடியாக பிடித்துள்ளார்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் ஒரு தனியார் லேத் பட்டறையில் ஐம்பொன் முருகன் சிலை ஒன்று ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. தகவலறிந்து அங்கு சென்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம், டிஎஸ்பி சுந்தரம் ஆகிய அதிகாரிகள் அங்கிருந்த சிவகுமார்,தேசனடிகள், முகேஷ், ஆகிய 3 பேரை சுற்றிவளைத்தனர். அவர்களிடமிருந்து ஐம்பொன் முருகன் சிலையை கைப்பற்றினர்.
முதலில் அந்த சிலையை மண்ணில் இருந்து தோண்டி எடுத்ததாக சிவகுமார் தெரிவித்த நிலையில், தோண்டித் துருவி விசாரித்ததில் அந்த சிலை அரக்கோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருடி கடத்தப்பட்டு வந்தது என்பதை ஒப்புக்கொண்டார். காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் நீண்ட தாடியுடன் சாமியார் போல கோவில்களில் வலம் வந்த தேசனடிகள் மூலம் இந்த சிலை கடத்திவரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சிலையை கன்னியாகுமரியை சேர்ந்த முகேஷ் ,சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் இஸ்மாயில் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ஒரு கோடி ரூபாய்க்கு விலைபேசி விற்க முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சிலை திருட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சிலை எந்த கோவிலில் இருந்து யாருடைய தூண்டுதலினால் திருடப்பட்டது என்றும், கடத்தல்காரர்கள் சொல்வது போல உண்மையில் இந்த சிலை தொன்மையானது தானா என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் உட்பட அவரது டீம் விசாரித்து வருகிறது.