தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் இ.ஆ.ப., இன்று (17/12/2021) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் வரும் ஜனவரி 3- ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. திட்டத்தை ஒருங்கிணைந்த திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை மற்றும் கரும்பு (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.