கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசால் பொங்கல் பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் பொங்கல் பரிசுத் தொகையும் கடந்த காலங்களில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வருடமும் பொங்கல் திருநாளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 2-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுவர். இதனால் 2356.67 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பச்சை அரிசி மற்றும் சர்க்கரை, 1000 ரூபாய் ரொக்கம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.