தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலேயே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகள் உலகப் புகழ்பெற்றது. பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் நேற்று 700 காளைகள் 730 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் பொங்கல் மறுநாள் பாலமேட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 936 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இவற்றைக் காண வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் திரண்டுள்ளனர். இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று 7மணிக்கு தொடங்கியது. இதில் 700 காளைகள் மற்றும் 921 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ரசிகர்களின் ஆரவாரத்திற்கு நடுவே வாடிவாசலில் காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன.
இதற்கிடையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் ஆகிய மூன்று காளைகளும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் இருந்து புயலாய் வந்தது. இவற்றை மாடுபிடி வீரர்களால் பிடிக்க முடியவில்லை.