Skip to main content

தமிழர்களின் பண்பாட்டு திருவிழா! களைகட்டும் பொங்கல் பெருவிழா!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா எனலாம். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் உயிர் நேய  பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் - உறவுகளின் ஒன்று கூடல் என  அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு.  பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுவவை ஆகும். ஆனால் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும், உறவுகளை புதுப்பிக்கவும் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் வழங்கக் கூடியது. அறுவடைத் திருநாளான பொங்கல் தமிழர்களுக்கு உற்சாகத்தை அளிக்கக் கூடியது. இந்த இரு திருநாள்களும் வரும் போது மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

pongal celebrations at cuddalore

 

 

பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, தமிழர்கள் வாழ்க்கையில் வளங்களும், நலங்களும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பொங்க தைத்திருநாள் வகை செய்யும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என நமது முன்னோர்கள் சொன்னது போல தை பிறக்கும் நாளில் தமிழர்கள் வாழ்விலும் புதிய வழிகள் பிறக்கும்; அவை மலர்ச்சியை அளிக்கும் என்பது நம்பிக்கை.

இத்தகைய பொங்கல் திருநாளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் தமிழ் மக்கள் தமது குடும்ப விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழ்நாட்டில் குடும்பங்களில் மட்டுமல்ல, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என எல்லா இடத்திலும் கொண்டாடுகின்றனர். புதுச்சேரியில் தி.மு.க சார்பில் வெகு விமரிசையாக இன்று பொங்கல் கொண்டாடப்பட்டது. பெண்கள் கும்மி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். கடலூர் பெண்கள் கல்லூரியில்  நடந்த பொங்கல் விழாவில் பிரான்சு, பெல்ஜியம் ஆகிய வெளி நாட்டினர் கலந்து கொண்டு பொங்கலை கொண்டாடினர்.   

 

pongal celebrations at cuddalore

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்  பொங்கல் விழாவை  முன்னிட்டு கோலம், கோகோ, கயிறு இழுத்தல், கபடி என பல்வேறு போட்டிகள் முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டிகளில்  பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் கலந்து கொண்டு கோலப்போட்டி, கோகோ, கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் விளையாடினர். ஆண் வழக்கறிஞர்கள் கபடி போட்டியில் கலந்து கொண்டனர். கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி விருத்தாச்சலம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்  புகையில்லா போகியும்,  சமத்துவ பொங்கலும் கொண்டாடினர். .

மாணவர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரும் ஒற்றுமையாக, சமத்துவ பொங்கலிட்டு சூரியனை வழிபட்டனர்.  பொங்கல் பானையில் பொங்கல் நிரம்பி வழியும் போது “பொங்கலோ… பொங்கல், பொங்கலோ… பொங்கல்..”  என உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்கள், ஆசிரியர்கள்  தமிழர்களின் பாரம்பரிய உடைகளான,  வேட்டி சட்டையியிலும், மாணவிகள் பட்டு சேலைகளும் அணிந்து வந்து தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தினர். மேலும் தமிழர் கலாச்சாரத்தை போற்றும் விதமாக கும்மியடித்தல்,  கோலமிடுதல், பரதநாட்டியம், கயிறு இழுத்தல், உள்ளிட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். 

பொங்கல் திருநாளுக்காக சந்தைகளில் மஞ்சள், பன்னீர் கரும்பு, போன்றவைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்