புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதியிலுள்ள ஏழை விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்வி அளிப்பதற்காக லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் சார்பில் கூட்டுறவு பான்சோஸ் மேல்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் கல்வி அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்புகளில் நூறு சதவீத தேர்ச்சியும் வழங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையினால் தள்ளாடிவரும் இந்த கூட்டுறவுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வர இயலாத காரணத்தினால் ஆசிரியர்கள் சரிவர பணிக்கு வரவில்லை.
அரையாண்டு தேர்வுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் Botany, zoology, Economics ஆகிய மூன்று பாட பிரிவுகளுக்கும் ஆசிரியர்கள் இல்லை. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் அமைச்சரும் கண்டுகொள்ளாததால் பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு தர வேண்டிய இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி, இலவச பஸ் பாஸ் உள்ளிட்டவைகளை செய்து தராத தமிழக அரசை கண்டித்தும், பள்ளிகளில் குடிநீர், கழிவறை கூட செய்து தர, முன்வராத கல்வி அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாச்சலம் ஸ்டேட் பேங்கில் இருந்து பேரணியாக வந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கல்வி அதிகாரிகள் ஒரு வாரக் காலத்திற்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பள்ளி மாணவர்கள் கலைந்து சென்றனர்.