வருமானவரி தொடர்பான வழக்கிலிருந்து கார்த்தி சிதம்பரம் எம்.பி மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015-ல் கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள முட்டுக்காடு பகுதியில், தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதன் மூலம், கிடைத்த 7.37 கோடியைக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதிக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018 -ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம்,மற்றும் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்தும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முழுமையாக முடிக்கும் முன்னரே, தங்களுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவிக்க வேண்டும் என வாதிட்டிருந்தார்.
அதேசமயம், வருமான வரித்துறையோ, இவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதியின் வாதத்தை ஏற்று இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி சதீஷ்குமார்.