சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது. ஆனால், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்துசெய்தது சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்றும், மேலும் ஒரு வருடத்திற்கு பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாகவும் நியமித்துள்ளது.
மதுரை டி.அரசம்பட்டியை சேர்ந்த பொன். மாணிக்கவேல் பி,எஸ்.சி, எம். எஸ்.டபிள்யு படிப்புகளை முடித்து குரூப் 1 அதிகாரியாக 1996-ம் ஆண்டு பிரிவில் காவல் துறையில் சேர்ந்தார். டி.எஸ்.பி.யாக ரமாநாதபுரத்தில் பணியை தொடங்கினார் பொன்.மாணிக்கவேல். அதன் பிறகு சேலம் மாவட்ட எஸ்.பி.யாகவும் கோவை மாவட்ட எஸ்.பி.யாகவும் செயல்பட்டுவந்தார். அதன் பின் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார். பிறகு மத்திய குற்றப்பிரிவிலும் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் பணிபுரிந்தார். இறுதியாக, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வருவதற்குமுன் இரயில்வே காவல் துறையில் ஐ.ஜி.யாக இருந்தார். இவர் இதுவரை மீட்டெடுத்த சிலைகளின் மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.