Skip to main content

தேங்காய் நீரில் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு; பொள்ளாட்சி இளைஞர் அசத்தல்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Pollachi youth discovered cure for diabetes in coconut water

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே அமைந்துள்ளது பொள்ளாச்சி நகராட்சி. இப்பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் விவேகானந்தன். இவர், அப்பகுதியின் பாரம்பரிய விவசாயமான தென்னை விவசாயம் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். பெரிய அளவில் விவசாயத்தின் மீது இருந்த நாட்டத்தினால், விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி, மாற்று பொருளாக மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்க ஆசைப்பட்டுள்ளார்.

அந்த வகையில், தனது சுற்று வட்டார பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரையாக மாற்றப்படுவதை அறிந்து, அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது, உடைக்கப்படும் தேங்காய்களிலிருக்கும் தண்ணீர் பயன்பாடின்றி வீணாக்கப்படுவதை கவனித்துள்ளார். உடனே, அந்த தேங்காய் தண்ணீரை வைத்து வேறு ஏதேனும் மதிப்பு கூட்டு பொருட்கள் செய்யலாமா? என்ற கோணத்தில் ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்விற்கு கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை கைகொடுத்துள்ளது. அந்த தனியார் மருத்துவமனை உதவியுடன் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த ஆராய்ச்சியானது, தேங்காய் தண்ணீரிலிருந்து ஏதேனும் மருத்துவ பொருட்களை தயாரிக்க முடியுமா? என்ற வகையில் அமைந்துள்ளது. அந்த ஆய்வின் வெற்றியாக, 2023ம் ஆண்டு ஆண்டு இறுதியில் தேங்காய் தண்ணீரை மூலப்பொருளாக கொண்டு, நீண்ட நாட்களாக ஆராத சர்க்கரை நோய் புண், தீக்காயம் ஆகியவற்றை குணமாக்க மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருந்து சோதனைக்கு அனுப்பப்பட்டு அங்கேயும் வெற்றி கண்டுள்ளது. அதனை அங்கீகரிக்கும் வகையில், நவம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதும் வழங்கி கவுரவித்துள்ளார். இதற்கிடையில், இந்த ஆராய்ச்சியை மேம்படுத்த மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், பொள்ளாச்சியிலேயே தொழிற்சாலை தொடங்கி மருந்தை தயாரிக்க அனுமதியும், காப்புரிமையும் வழங்கியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முதல் மருந்து என்பதால், வருகின்ற 2024 ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய மருந்து கண்டுபிடிப்பாளர் விவேகானந்தன், “நான் உயர்கல்வி அமெரிக்காவில் முடித்தேன். அங்கு படிக்கும்போதே, எனக்கு மருத்துவத்துறையின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாக, வீணாகும் விவசாய பொருட்களிலிருந்து மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. அந்த கனவு, இரண்டரை ஆண்டுகள் செய்த உழைப்பின் பலனாக தற்போது நிறைவேறியுள்ளது. கொங்கு மண்டலத்தில் உற்பத்தியாகும் 4500 கோடி தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரைகளாக மாற்றப்படும்போது, அதிலிருந்து கிடைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் தண்ணீர் வீணாக்கப்படுவதை அறிந்தோம். அந்த வீணாகும் தேங்காய் தண்ணீரை மூலப்பொருளாக கொண்டு சர்க்கரை நோய், நாட்பட்ட புண்கள் ஆகியவற்றை குணமாக்க மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அந்த ஆராய்ச்சியில் எனக்கு வெற்றி கிடைத்தது. ஆராய்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தை அங்கீகரித்துள்ளது. மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை பொள்ளாச்சியில் கட்டப்பட்டு, மருந்து தயாரிக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது. விரைவில் மருந்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு வழங்க உள்ளோம். நாங்கள் கண்டுபிடித்த மருந்தானது பயோ செல்லுலோஸ் வகையை சார்ந்தது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் கோகோ லைஃப், கோகோ ஷீல்டு, கோகோ ஹீல் போன்ற மருந்துகள் சந்தைப்படுத்த காத்திருக்கின்றன. இதனை புண்ணின் மேற்பரப்பில் மருந்துக்கட்டாக பயன்படுத்த வேண்டும். மேலும், மருந்திற்கான மூலப்பொருட்கள் விவசாயிகளிடமிருந்து தான் வாங்க இருக்கிறோம், அதன் மூலம் விவசாயிகளும் பயன் பெறுவர்” என கூறினார். 

கோவையில், வீணாகும் தேங்காய் தண்ணீரை கொண்டு மருந்து கண்டுபிடித்த சம்பவம் தமிழக மக்களிடம் வெகுவாக பாராட்டைப் பெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்