2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் நான்காவது நாளான இன்று சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் குறித்த விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, “தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாகத் தென் தமிழ்நாட்டு மக்களின் நீண்ட காலக் கனவாக இருப்பது சேது சமுத்திரத் திட்டம். அதனை ராமர் பாலம் என்று சொல்லி மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதை மக்கள் நம்ப வேண்டும் என்று முயல்கிறது. கட்டுக்கதைகளும், கற்பனைகளும், நம்பிக்கைகளும் வரலாறு ஆகாது” எனப் பேசினார்.
இந்நிலையில் இது குறித்துப் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், "100 கோடி மக்களுக்கு மேல் பின்பற்றுகிற ஒரு மதத்தின் நாயகன் ராமர். ஒரு நாளைக்கு பல முறை ராம ராமா என்று சொல்லுகிறோம். அப்படிப்பட்ட ராமரை கற்பனை கதாபாத்திரம் என்றும் கற்பனைக் கதைகள் என்றும் எப்படிச் சொல்வது. ராமர் ஒரு அவதார புருஷன். அவரைக் கதாபாத்திரம் என்று அவையில் பதிவு செய்தது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.