பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டு பிடியுங்கள் என்ற முழக்கத்தோடு இன்று (ஜனவரி 10- ஆம் தேதி) பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என கனிமொழி வர, கனிமொழி பொள்ளாச்சிக்குள் நுழையக் கூடாது. ஆர்ப்பாட்டம் நடக்கக் கூடாதென பொள்ளாச்சி வி.ஐ.பி. சென்னையில் இருந்து உத்தரவிட்டாராம்.
இதையடுத்து, பொள்ளாச்சிக்கு வரும் வழியெங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கனிமொழியின் கார் முள்ளுப்பாடி ரயில்வே கேட் அருகே வரும் போது காவல்துறையினர் கனிமொழியின் காரைத் தடுத்து நிறுத்தினர். பொள்ளாச்சிக்குள் நுழைய முடியாது என கனிமொழியிடம் காவல்துறையினர் கூறினர். உடனே கனிமொழி ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்திற்கு அனுமதி இல்லையென்றால், அந்த ஆர்ப்பாட்டம் இங்கே நடத்தப்படும் என்றார்.
இதனிடையே, கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்ட தகவலையறிந்த மு.க. ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி, தி.மு.க. சார்பில் நடைபெறும் போராட்டத்தை காவல்துறையினர் தடுத்தால் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினரின் போராட்டம் நடக்கும் என காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் தி.மு.க.வினர் கனிமொழியைச் சுற்றி நின்றுக் கொள்ள வேறு வழியின்றி காவல்துறையினர் கனிமொழிக்கு வழிவிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டார்.