Skip to main content

வட மாநிலங்களின் காவி-சனாதன பாலியல் பயங்கரவாதம் தமிழ்நாட்டையும் தொற்றிக்கொண்டுள்ளது! வேல்முருகன்

Published on 12/03/2019 | Edited on 12/03/2019



 

பொள்ளாச்சியில் அதிமுக புள்ளி பார் நாகராஜ் தலைமையிலான கும்பல், நூற்றுக்கணக்கான பள்ளி-கல்லூரி மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளது; அவர்களை ஆபாச வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவேற்றியுள்ளது; அந்த ஆபாச வீடியோவைக் காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் அவர்களிடம் பணம் கறந்துள்ளது!


ஆனால் ஆளுங்கட்சி இதனை மூடிமறைக்கப் பார்ப்பதாகத் தெரிகிறது; எனவே உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவி ஒருவர் காவல்நிலையம் வந்து புகார் ஒன்றை அளித்தார். தன்னை ஒரு கும்பல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும், அவர்களின் பிடியிலிருந்து தப்பித்துவந்தே புகார் அளிப்பதாகவும் போலீசாரிடம் அவர் கூறினார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் 4 இளைஞர்களைக் கைது செய்தனர். அந்த இளைஞர்கள் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர். அவர்களிடமிருந்து நிறைய ஆபாச வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் அந்த இளைஞர்களிடம் சிக்கிப் பெண்கள் துன்புறும், கதறும் காட்சிகள் உள்ளன. அந்தப் பெண்கள் பள்ளி-கல்லூரி மாணவிகள் மற்றும் மணமான இளம்பெண்கள். அப்பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியது மட்டுமன்றி, அதனை வீடியோ எடுத்து, அவர்களிடமே காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஃபேஸ்புக் வழியாக நட்புக் கொண்டு, காதலிப்பதாகக் கூறி, பாலியல் பலாத்காரத்தை (பயங்கரவாதத்தை) அரங்கேற்றியிருக்கின்றனர் அந்தக் காதகர்கள். நூற்றுக்கணக்கான பெண்கள் இப்படிச் சிக்கிச் சின்னாபின்னப்பட்டுள்ளனர் அவர்களிடம்.

 

tvk velmurugan


 

இந்த 4 இளைஞர்களோடு ஒரு கும்பலே உள்ளது; ஆனால் இந்த 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்; மீதிப் பேரைக் கைது செய்யாததற்கு ஆளும்கட்சியினர் தொடர்புதான் காரணம் என்று சொல்லும் பொதுமக்கள், இந்த 4 பேரைக் கைது செய்தும்கூட, 10 நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் மேல் எஃப்ஐஆரே போடப்பட்டது என்கின்றார்கள். நான்கு பேரும் நேற்று முன்தினம் பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை 25ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

இந்த விவகாரம் தொடர்பாக, #ArrestPollachiRapists என்கிற ஹேஷ்டேகில் வலைதளத்தில் கண்டனங்கள் வலம்வருகின்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் காட்டுத்தீயாகப் பரவுகிறது.
 

இதற்கிடையில், புகார் அளித்த பெண்ணின் அண்ணனை 4 பேர் கும்பல் மோசமாகத் தாக்கி, புகாரை வாபஸ் பெறச் சொல்லியிருக்கிறார்கள். அந்த 4 பேர் செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர். இதில் பார் நாகராஜ்தான் மொத்த கும்பலுக்கும் மூளை என்று தெரிவிக்கப்படுகிறது. இவர் அதிமுக புள்ளி; ஜெயலலிதா பேரவைச் செயலராக உள்ளார். நான்கு நாட்களுக்கு முன் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்; ஆனால் மூன்றே நாளில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 

புகார் கொடுத்த மாணவியின் அண்ணன் தாக்கப்பட்டதன்றி, மாணவி சார்பில் வாதாட முன்வந்துள்ள பெண் வழக்கறிஞருக்கும் இப்போது மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது.
 

பார் நாகராஜ் ஆளுங்கட்சிப் புள்ளி என்பதால், அவர் தலைமையிலான குற்றவாளிகளைக் காப்பாற்றவும் விவகாரத்தை மூடிமறக்கவுமே நால்வரும் விடுவிக்கப்பட்டனர் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் முதலில் கைது செய்த 4 பேரை வைத்தே விசாரணையை இழுத்தடித்து வழக்கை நீர்த்துப்போகச் செய்வதுதான் திட்டம் என்றும் சொல்கிறார்கள்.
 

இதனால் வழக்கை சிபிசிஐடி, சிபிஐ போன்ற அமைப்புகளே விசாரிக்க வேண்டும் என்பவர்கள் ஒருபுறம் என்றால், உயர் நீதிமன்றம் இதில் நேரடியாகத் தலையிட்டு அதன் மேற்பார்வையில்தான் விசாரண நடைபெற வேண்டும் என்கின்றனர் பெருவாரியான மக்கள். இதற்காக மக்கள் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர்.
 

இந்த நிலையில், பார் நாகராஜை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர். ஆனால் இதுவும் ஒரு தந்திரம்தான் என்கின்றனர் மக்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடத்தப்படும் கண்துடைப்பு நாடகம் இது என்கின்றனர்.
 

இதுவரை எந்தப் பிரச்சனையிலும் நேர்மையாக நடந்துகொள்ளாத அதிமுக அரசு இதில் மட்டும் எப்படி நேர்மையாக நடந்துகொள்ளும்? ஆகவேதான், உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இதில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்