பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் போலீசாரைக் கண்டித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தினரை பழைய பேருந்து நிலையத்தில் போலிசார் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமையன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த மாவட்ட எஸ்.பி செல்வராஜ் மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமியை கன்னத்தில் அறைந்து தள்ளினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து வேனில் போலீசார் ஏற்றினார்கள்.
இதனால் போராட்டத்தில் இருந்த மாணவிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து கைது செய்தவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்து சாலையில் அமர்ந்தனர். அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கைது செய்யப்பட்டவர்கள் இறக்கி விடப்பட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்ட மாணவிகளை பெண் போலிசார் இல்லாமல் ஆண் போலிசாரே மாணவிகளை தள்ளிவிட்டனர். மேலும் சில சீருடை இல்லாமல் நின்ற போலிசார் மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் மாணவிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பினார்கள்.
இந்த நிலையில் காயமடைந்த அரவிந்தசாமி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அரவிந்தசாமியை மருத்தவமனையில் இருந்து வெளியேற்றும் முயற்சியை எடுத்ததால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட எந்த பதிவுகளையும் இல்லை என்று மருத்துவமனை வட்டாரத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மாணவிகள் மீதும், மாணவர் சங்கத் தலைவர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறை கண்காணிப்பாளரைக் கண்டித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு மாணவர், வாலிபர், மாதர் சங்கத்தினர் தயாரானார்கள். புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி செல்ல முற்பட்டனர். இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் லெனின், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலளர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பேரணியாக முழக்கங்களுடன் புறப்பட்டவர்களை போலிசார் தடுத்து நிறுத்தினார்கள். தடுப்புகளை கடந்து செல்ல பலர் முயன்றனர். அப்போது போலீசார், காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பதாக தொடர்ந்து வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று எஸ்பியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு போராட்டக்களாரர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறியதாவது..
பேச்சுவார்தையின் போது.. இதுபோன்ற விரும்பத்தகாத செயல் இனிமேல் நடக்காமல் இருக்க காவல்துறை ஒத்துழைப்பு அளிப்பதாகவும், நடந்துள்ள சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் எஸ்.பி. செல்வராஜ் சங்கத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதனால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது ஆனால் எங்கள் கட்சி தலைமை என்ன முடிவுகள் எடுக்கிறதோ அதுபடி செயல்படுவோம் என்று கூறி வந்திருக்கிறோம் என்றார்.
அதே நேரத்தில் கோவை எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைமே அனுமதி அளித்துள்ளது. அதேபோல மாணவர்கள் மீது தாக்கிய புதுக்கோட்டை எஸ்.பி. மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றனர் மாணவர் சங்க நிர்வாகிகள்.