சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் இந்தி மொழியை எதிர்த்து போராடி குண்டடி பட்டு பலியான மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகி தினத்தன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு இன்று ஜனவரி 25 மொழிப்போர் தியாகி தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் நகர் மன்ற தலைவர் செந்தில்குமார், முன்னாள் திமுக எம்எல்ஏ சரவணன் மற்றும் திமுக மூத்த நகர் மன்ற உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் இதே போல் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ முருகுமாரன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மொழிப்போர் தியாகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.