சாலையில் மது போதையில் கிடந்த நபரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்ததில் அந்த நபர் மற்றொரு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் பிரீமியர் ரமேஷ் மற்றும் அவரது தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது புதுச்சேரி - கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியான கண்ணியக்கோவில் நான்குமுனை சந்திப்பில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மதுபோதையில் அங்கிருந்த பொதுமக்களை ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அங்கு சென்ற போலீஸ் ஏட்டு ரமேஷ் மற்றும் போலீசார் அந்த நபருக்கு வாட்டர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்கச் செய்துள்ளனர். ஆனால் போலீசாரை பார்த்து அந்த நபர் ஆபாசமாக திட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். உடனடியாக அந்த நபர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார். ஆனால் மிகுந்த போதையில் இருந்த அந்த நபர் அங்கிருந்த காவலர்களை மிரட்டியதோடு ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். ''நானும் போலீஸ்காரன் தான். என்னை ஒன்னும் செய்ய முடியாது'' என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை கைகலப்பாக மாற போலீசாருக்கும் போதை ஆசாமிக்கும் இடையே மோதல் உருவானது. 'என் மீது எந்த பிரிவுகளிலும் வழக்கு போடுங்கள் ஆனால் உங்கள் மீது நான் வெடிகுண்டு வீசுவேன்' என மிரட்டல் விடுத்தார் அந்த போதை நபர். பின்னர் காவல் நிலையத்திலிருந்து தப்பிக்க முயன்ற அந்த நபரை போலீசார் பிடித்து மீண்டும் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் கடலூரை அடுத்துள்ள கீழ்புவானிக்குப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் என்பதும், இவர் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது.