விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (27). தமிழக காவல்துறையில் 2022 ஆம் ஆண்டு சேர்ந்த அருண்குமார் சென்னை ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் சென்னை அயனாவரம் வசந்தம் காலணியில் தனது சக காவலரான புஷ்பராஜ் என்பவருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் புஷ்பராஜ் வெளியே சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பிய போது, அருண்குமார் சீருடையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து புஷ்பராஜ் அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயனாவரம் காவல் ஆய்வாளர் முருகேசன், துணை ஆய்வாளர் மீனா உள்ளிட்ட காவல்துறையினர், அருண்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, அருண்குமார் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வந்துள்ளார்கள். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், திருநெல்வேலி ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த பிரியாவை அருண்குமார் காதலித்து வந்துள்ளார். அதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இருவரின் திருமணத்திற்கு பிறகு பணிநிமித்தமாக பிரியா திருநெல்வேலி ஆயுதப்படை காவலராகவும் அருண்குமார் சென்னையிலும் பணியாற்றி வந்துள்ளார்கள்.
அருண்குமாரின் தந்தை வாய் பேச முடியாதவர். தாயாருக்கு கண்பார்வை கிடையாது. அவர்கள் இருவரும் சொந்த ஊரான விருதுநகரில் வாழ்ந்து வந்துள்ளார்கள். இதனால் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் அருண்குமாருக்கு இருந்துள்ளது. அருண்குமார் உடன்பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள். அதிலொருவர் டெல்லியில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். மற்றொருவர் மின்சாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியா சில மாதங்களாகவே அருண்குமாருடன் சரியாகப் பேசாமல் அவரை உதாசீனப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அருண்குமாருக்கும் பிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இருவரும் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருண்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அருண்குமார் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் அருண்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 4 பக்கங்களுக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று தெரிந்தது. அருண்குமார் எழுதிய அந்த கடிதத்தில், “கடந்த சில நாட்களாகவே எனது மனைவி பேசும் பேச்சுகள் என்னை மிகவும் பாதித்துள்ளது. நான் இதுவரை கேட்டிராத அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அவர் பேசி வருகிறார். நான் எனது மனைவிக்கு தொலைப்பேசியில் அழைத்து உன்னைப் பார்க்க ஊருக்கு வருகிறேன் என்று தெரிவித்தால், ‘நீ ஏன் என்னைப் பார்க்க வர வேண்டும். அதெல்லாம் வர வேண்டாம்’ என்று கூறுகிறார்.
திருமணமான ஒருவன் தனது மனைவியுடன் இருப்பதையும், அவருடன் சினிமாவுக்கு, கடைக்கு செல்வதையும்தான் விரும்புவான். அதுபோல்தான் நானும் விரும்பினேன். ஆனால் அது நடக்கவில்லை. எனது மனைவி பேசிய பேச்சுகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். மேலும், எனது உடலை என் தம்பி டெல்லியில் இருந்து வந்ததும் அவனிடம் ஒப்படைத்து, பிறகு அடக்கம் செய்ய வேண்டும். இந்த கடிதத்தை ஒரு நகல் எடுத்து காவல்துறையினர் கண்டிப்பாக எனது தம்பியிடம் கொடுக்க வேண்டும். என்னுடைய தம்பி மனைவிகள் இருவரும் வயதான எனது பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும். எனது இறுதிச்சடங்கு உள்ளிட்ட எதிலும் எனது மனைவி பிரியா மற்றும் அவர் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளக் கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தில் அருண்குமார் தனது மனைவியை ‘குட்டிம்மா’ என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதில், “என்னை என் தாய் ஒழுங்காக வளர்க்கவில்லை என நீ கூறுகிறாய். ஆனால், நான் இதுவரை உன்னை ஒரு வார்த்தை கூட அசிங்கமாகப் பேசியதில்லை. இதில் இருந்து என்னை என் தாய் ஒழுங்காகத்தான் வளர்த்துள்ளார். ஆனால், நீ பேசிய வார்த்தைகளை கொஞ்சம் நினைவுபடுத்திப் பார். அதில் உன்னை உன் தாய் எப்படி வளர்த்துள்ளார்கள் என்று தெரியும். எனது பெற்றோர் என்னை வளர்த்ததில் எந்த தவறும் இல்லை. அதனால்தான் நீ என்னை இவ்வளவு பேசிய பிறகும் நான் உன்னை எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று உருக்கமாக எழுதியிருந்தார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட காவலர் அருண்குமார், தனது நண்பரிடம் பேசிய ஆடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில், ‘ரொம்ப சிரமமாக உள்ளது அண்ணா. நானும் என் மனைவியும் ஆளுக்கு ஒரு பக்கம் வேலை செய்து வருகிறோம். எனது திருமணத்திற்கு 10 நாட்கள்தான் விடுமுறை கிடைத்தது. போனில்தான் வாழ்க்கை ஓடுது. போனில்தான் குடும்பம் நடத்தி வருகிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி விசாரணை நடத்தி வருகிறார்.