செப்டம்பர் 13-ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்துக்கு நடந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், இணைச் செயலாளர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் ஏ.பி.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றனர். தலைவராக அங்கிவ் பார்சோயா வெற்றிபெற்றார்.
இந்நிலையில் பார்சோயாவின் கல்வித் தகுதிகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது. வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. கலைப் பிரிவில், இளநிலைக் கல்லூரிப் படிப்பை முடித்ததாக சான்றிதழ் சமர்ப்பித்திருக்கும் பார்சோயாவின் சான்றிதழ்கள் போலியானவை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்கிவ் பார்சோயா என்ற பெயரில் யாரும் படித்ததில்லை என திருவள்ளுவர் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுவதாக என்.டி.டி.வி. ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் சான்றிதழில் அவர் இளங்கலை படித்த காலகட்டத்தில் டெல்லிப் பல்கலைக்கழக தேர்தல், போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றது அங்கிவ்வின் முகநூல் மூலம் அம்பலமாகியிருக்கிறது. அதேசமயம் வேலூரில் அவர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
வகுப்புகளும், தேர்வும் இருக்கும்போது மட்டும் வேலூருக்குச் செல்வேன் என சமாளிக்கும் அங்கிவ் பார்சோயா, படித்த பாடங்கள் பற்றியோ, கற்பித்த பேராசிரியர்களைப் பற்றியோ கேட்டால் எதுவும் நினைவில்லை என்கிறார். அதேபோல 2015 வரை கல்லூரிப் படிப்பு இருக்க, அதற்குமுன்பே 2014-லேயே மூன்றாம் பருவ மதிப்பெண் வழங்கப்பட்டதும் முரண்படுகிறது. மதிப்பெண் சான்றிதழில் இடம்பெற்றிருக்கும் பல்கலையின் இணையதள முகவரியும் தவறாக இருக்கிறது.
இதையடுத்து இந்திய மாணவர் சங்கம் பல்கலைக்கழகத்திலும் காவல்துறையிலும் அங்கிவ் மீது புகார்தந்துள்ளது. இதற்கு எதிர்வினையாக ஏ.பி.வி.பி., தில்லி பல்கலைக்கழகம் அவரது சான்றிதழ்களைச் சரிபார்த்துதான் சேர்த்துக்கொண்டது. மாணவரின் சான்றிதழை ஆராய்வது இந்திய மாணவர் சங்கத்தின் வேலையல்ல என பார்சோயாவுக்கு ஆதரவாகக் குதித்துள்ளது.