சேலத்தில் இரவு நேர காவலாளி கொலை வழக்கில், அவருடைய இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி சுபாஷ்சந்திரபோஸ் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவர், ராசிபுரத்தில் உள்ள தனது முதல் மனைவி, இரண்டு மகன்களை பிரிந்து தனியாக கடந்த 20 ஆண்டுக்கு முன்பு சேலத்தில் குடியேறினார். இங்கு இரண்டாவதாக சாந்தி (55) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகப்பன் என்ற ஒரு மகன் உள்ளார்.
கடந்த 20 நாள்களுக்கு முன்பு, ஊற்றுமலை அடிவாரத்தில் உள்ள நொச்சிப்பட்டியார் காட்டைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு கடையில், இரவுக் காவலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். வெள்ளிக்கிழமை காலையில், அந்தக் கடையின் ஊழியர்கள் வேலைக்குச் சென்றபோது, கடையின் முன்ப குதியில் ராமசாமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். மர்ம நபர்கள் அவரை கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருப்பது தெரிய வந்தது. உடலில் பல இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன.
இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சம்பவ இடம் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், பழைய இரும்பு கடைக்கு அருகே மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்தக் காட்சிகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில், சுபாஷ்சந்திரபோஸ் நகரைச் சேர்ந்த பாபு என்கிற பிரதாப் (31), ரஹ்மான் என்கிற அப்துல் ரஹ்மான் (25), கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பிரபு (30) என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்துதான் காவலாளி ராமசாமியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், கொலைக்கான காரணம் குறித்து பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. கொலையுண்ட ராமசாமியின் இரண்டாவது மனைவியான சாந்தியும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்த நிலையில்தான், ராமசாமி அவர் திருமணம் செய்திருக்கிறார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் ஒருவரான பாபு என்கிற பிரதாப், சாந்தியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் ஆவார். பெற்றோரை பிரிந்து, அதே பகுதியில் தனியாக வசித்து வரும் பிரதாப், பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்று வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி தாய் சாந்தி, மற்றும் ராமசாமியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். மகனின் திருமணம் குறித்து சாந்தியும் அடிக்கடி ராமசாமியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் அலட்சியம் செய்துள்ளார். இதனால் ராமசாமி மீது பிரதாப்புக்கு உள்ளூர வெறுப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தன் நண்பர்களான ரஹ்மான், பிரபு ஆகியோரிடம் கூறியுள்ளார் பிரதாப். இந்நிலையில்தான், வியாழக்கிழமை (நவ. 14) இரவு பிரதாப், ரஹ்மான், பிரபு ஆகிய மூவரும் குடிபோதையில் ராமசாமி வேலை செய்து வந்த இடத்திற்கு அவரைத் தேடிச்சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரத்தில் அவர்கள் மூவரும் தாங்கள் வைத்திருந்த கத்தி, கத்திரிக்கோல் ஆகியவற்றால் ராமசாமியை சரமாரியாக வெட்டியும், குத்தியும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.