போலீஸ் இடமாற்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. ரவி, சிறப்பு அதிரடிப்படை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரப்பன் வேட்டைக்குப் பிறகு இயங்காமல் இருக்கிறது சிறப்பு அதிரடிப்படை, அங்கு இவர் மாற்றப்பட்டதற்கு காரணம், ஒரு வீடியோதான்.
சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினர் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்தால் புகார் தெரிவியுங்கள் என கோவை மாவட்டத்தில் ஒரு சிறுவனுக்கு எதிராக காவல்துறை நடத்திய அத்துமீறலை சுட்டிக்காட்டி ஒரு வீடியோ வெளியிட்டார் ரவி. இதுவரை இப்படி காவல்துறையினருக்கு எதிராக, ஒரு காவல்துறை அதிகாரி பொதுமக்களுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டதில்லை. அந்த வீடியோ மக்களிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ குறித்து தனது எதிர்ப்பை டி.ஜி.பி. திரிபாதி தெரிவித்திருக்கிறார், அதனைத் தொடர்ந்து ரவி மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல் சாத்தான்குளத்தில் நீதிபதியிடம் அவமரியாதையாக நடந்த கூடுதல் எஸ்.பி. குமார் காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீலகிரி மாவட்ட மதுவிலக்கு துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றமும் டி.ஜி.பி. திரிபாதியின் பரிந்துரையினுடையே நடைபெற்றுள்ளது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.