கடலூர் மதுவிலக்கு பிரிவில் தலைமைக் காவலராகப் பணி செய்து வந்தவர் சக்திவேல். இவர் சம்பவத்தன்று கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனையிடும் பணியில் இருந்துள்ளார். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வேகமாக வந்த ஒரு காரை காவலர் சக்திவேல் சோதனை செய்ய வழி மறித்துள்ளார். அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. உடனே சக்திவேல் தனது இருசக்கர வாகனத்தில் அந்த காரை துரத்திச் சென்று வழிமறித்து நிறுத்தி காரில் சோதனை செய்தபோது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்கள் இரண்டு எடுத்துச் சென்றதைக் கண்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்த காரில் இருந்த மூன்று வாலிபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவலர் சக்திவேல் விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் மூவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள். அவர்கள் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா பகுதிக்கு சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். அப்படி புதுச்சேரி வழியாக வரும்போது இடையில் சாப்பிடுவதற்காக புதுச்சேரியில் மது வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதை விசாரணை மூலம் தெரிந்துகொண்ட காவலர் சக்திவேல், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டும் எனப் பேரம் பேசி உள்ளார். அந்த பணத்தையும் தனது வங்கிக் கணக்கிற்கு கூகுள் பே மூலம் அனுப்பி வைக்குமாறு சக்திவேல் கூறியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி அந்த மாணவர்கள் சக்திவேல் கூறிய எண்ணுக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களை சக்தி சக்திவேல் வழி அனுப்பி வைத்துள்ளார். கூகுள் பே மூலம் சக்திவேல் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ரகசிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கவனத்திற்கு சக போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து அவர் நடத்திய விசாரணையில், கூகுள் பே மூலம் காவலர் சக்திவேல் பத்தாயிரம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவலர் சக்திவேலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.