திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேல காடுவெட்டி என்ற பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி இசக்கி பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் மருகாபூரியைச் சேர்ந்த சிவசுப்பு, முத்து மணிகண்டன், சூர்யா, வசந்த குமார், இசக்கி பாண்டி உள்ளிட்ட 5 பேர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருந்துள்ளனர். இது குறித்து திருநெல்வேலி போலீசாருக்கு நேற்று (04.01.2024) மதியம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து செல்போன் சிக்னலை கொண்டு சம்பந்தப்பட்ட ரவுடி கும்பலை பிடிக்க நேற்று திருநெல்வேலி தனிப்படை போலீசார் பெருந்துறைக்குச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ மற்றும் 6 போலீசார் ரவுடி கும்பலை சுற்றி வளைக்க முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் ரவுடி கும்பல் போலீசாரிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் ரவுடி சிவசுப்பு அரிவாளால் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அதே சமயம் அரிவாளை காட்டி போலீசாரிடம் இருந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து ரவுடி கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இது குறித்து உதவி ஆய்வாளர் ஆண்ட்ரோ அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து காவல்துறையினரும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஈரோட்டில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், பெருந்துறையில் இருந்து தப்பிய ரவுடிகள் 5 பேரில் 2 பேர் நெல்லை அருகே பிடிபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிவசுப்பு, முத்து மணிகண்டன் ஆகியோருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவசுப்பு மீது திருநெல்வேலி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.