கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் முருகன். இவர் செஞ்சி அருகில் உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ராணி (வயது 56) என்ற முதல் மனைவியும்; இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஆலம்பூண்டி கிராமத்தில் வசித்து வந்த முருகனுக்கு மேகலா (வயது 49) என்ற இரண்டாவது மனைவியும் உள்ளார். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளார்.
முருகன் கடந்த 1997ம் ஆண்டு காலகட்டத்தில் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார். இவருடன் பணியில் சேர்ந்தவர்கள் பலர் தற்போது பதவி உயர்வு பெற்று காவல் உயர் அதிகாரிகளாக உள்ளனர். ஆனால், முருகன் மட்டும் இன்னும் சப்-இன்ஸ்பெக்டராகவே பணியில் இருந்துள்ளார். இதற்கு காரணம் அவ்வப்போது இவருக்கு பணியின் போது அதிகாரிகள் சார்ஜ், மெமோ என வழங்கியுள்ளனர். அதனால் பல்வேறு காவல்நிலையங்களுக்கு பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு வர வேண்டிய கூடுதல் ஊதிய உயர்வுகள் மற்றும் பதவி உயர்வுகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் முருகன் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முருகனின் தாயார் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதற்காக விடுமுறை எடுத்த முருகன் விடுமுறை முடிந்து 23 ஆம் தேதி மீண்டும் பணியில் சேர வேண்டும். ஆனால், இவர் பணியில் சேராமல் திண்டிவனத்தில் சேடன்குட்டை தெருவில் குடியிருந்து வரும் இரண்டாவது மனைவி மேகலா வீட்டில் தங்கி இருந்துள்ளார். அன்று இரவு முருகனை காணாமல் அவரது மனைவி தேடி உள்ளார். அவர்கள் வீட்டின் மாடியில் உள்ள அறையானது தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பது தெரியவந்து சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை உடனடியாக மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.