திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன். இவர் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், வெட்டிக் கொலை செய்தது ஆடு திருடும் கும்பல் என்பது தெரிய வந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருடிய கும்பலை விரட்டி சென்ற போது எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில், சந்தைகளில் விற்கப்படுவதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று (21/11/2021) அதிகாலை 02.00 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆடு திருடும் கும்பலைத் தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டியுள்ளார். அப்பொழுது அந்த கும்பல் அவரை வெட்டி சாய்த்து உள்ளது அந்த கும்பல். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருடர்களால் காவல் அதிகாரி பூமிநாதன் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.ஸ்டாலின், எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிதியுதவியும், குடும்பத்திற்க்கு ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம், சோழமாநகரில் உள்ள மயானத்தில் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதனின் உடல் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனிடையே, எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை தொடர்பாக இரண்டு டி.எஸ்.பி.க்கள் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.