வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே லத்தேரி கோரப்பட்டரைப் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரின் மகன் குணசேகரன். ஐடிஐ படிப்பு முடித்துள்ள குணசேகரன் வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு வீட்டை விட்டுச் சென்ற அவர் காலை வரை வீட்டுக்கு வரவில்லை. அவருடைய தாயார் ராஜலட்சுமி பல்வேறு இடங்களில் தேடியும் எந்த விதமும் தகவல்கள் கிடைக்காத நிலையில் காலையில் வந்து குணசேகரன் வந்துவிடுவார் என்று காத்திருந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் மளிகைக் கடைக்குப் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் ஒரு சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற லத்தேரி போலீசார், சடலம் யார் என்று ஆய்வு செய்தனர். அதில் குணசேகரன் தான் சடலமாகக் கிடப்பதை போலீசார் உறுதி செய்த நிலையில் அவரை யாரோ தலையில் கடுமையாகத் தாக்கி கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. மேலும் குணசேகரின் இருசக்கர வாகனமும், அதிலே அவர் இரவு உண்பதற்கு வாங்கி வந்த உணவும் அப்படியே இருந்துள்ளது. இதனையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், யாரவது கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க மோப்ப நாயை வரவைத்து பல்வேறு பகுதிகளில் தடயங்களைச் சேகரித்து சந்தேகத்திற்கு இடமான ஆறு பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.