சேலத்தில், குடும்பத்தகராறு தொடர்பாக புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு காதல் வலைவிரித்த போலீஸ் எஸ்ஐ, பெண்ணின் கணவரை தாக்கி சிறை வைத்த புகாரின்பேரில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் மலைவாசன். வெள்ளிப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இது தொடர்பாக மணிமேகலை பலமுறை அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பம் என்றால் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படுவது சகஜம் என்றுகூறி போலீசாரும் பலமுறை அவர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால், அடிக்கடி கணவர் மீது புகார் கொடுக்கச் சென்று வந்ததில், மணிமேகலைக்கும் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் கலைசெல்வன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மணிமேகலை புகார் கொடுத்தால், அந்தப் புகார் மீது தானாகவே முன்வந்து கலைசெல்வன் விசாரணை நடத்துவதுபோல் அவருடன் சிரித்துப் பேசி பழகி வந்துள்ளார்.
புகார்தாரர் - போலீஸ்காரர் என்ற உறவைத் தாண்டியும், அவர்கள் இருவரும் 'நெருக்கமாக' பழக ஆரம்பித்தனர். இதுகுறித்து அறிந்த மணிமேகலையின் கணவர் மலைவாசன், மனைவியைக் கண்டித்துள்ளார். மனைவியுடனான தொடர்பை விட்டுவிடுமாறு எஸ்ஐயையும் கண்டித்ததுடன், இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் செய்து விடுவதாகவும் மலைவாசன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும், மலைவாசனை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். கடந்த சில மாதங்களாக மலைவாசன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். கணவர் இல்லாததால், எஸ்ஐ கலைசெல்வன் அடிக்கடி மணிமேகலை வீட்டிற்கே வந்து அவருடன் 'நெருக்கமாக' இருந்துவிட்டுச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு, மணிமேகலை வீட்டிற்கு வந்த எஸ்ஐ கலைசெல்வன் வீட்டில் இருந்த மணிமேகலையின் மகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர், தன் தந்தை மலைவாசனிடம் கூறினார். ஆத்திரம் அடைந்த மலைவாசன், மணிமேகலையின் வீட்டிற்கு இன்று (அக்டோபர் 9, 2018) வந்தார். அப்போது எஸ்ஐ கலைசெல்வனும் அங்கு இருந்துள்ளார். மகளை தாக்கியது குறித்து தன் மனைவியிடமும், எஸ்ஐயிடமும் கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்ஐ கலைசெல்வன், மலைவாசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் அடைந்தார். மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள்ளேயே ஒரு அறையில் சிறை வைத்தனர்.
அவர் ஜன்னல் பக்கமாக எட்டிப்பார்த்து தன்னைக் காப்பாற்றும்படி கூச்சல் போட்டார். அதையறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர். அப்போது வீட்டுக்கு வெளியே எஸ்ஐ கலைசெல்வனும், மலைவாசனும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். மேலும், காயம் அடைந்திருந்த மலைவாசனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மலைவாசன் அளித்த புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், எஸ்ஐ கலைசெல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதற்கிடையே, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், அதிரடியாக எஸ்ஐ கலைசெல்வனை அன்னதானப்பட்டியில் இருந்து வீராணம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.