ஜெ.மரணம் தொடர்பான அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கைகள் வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் இதுகுறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ''அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையில் 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார்கள். கூடுதல் இழப்பீடு கொடுக்க வேண்டும் என சொல்லியுள்ளார்கள். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது அறிக்கையை முழுமையாகப் பார்த்து என்னென்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதனை ஒரு பாடமாக வைத்து காவல்துறை கற்றுக்கொள்ள வேண்டும். இது மனித உயிர்கள். கண்மூடித்தனமாக மனித உயிர்களை யாரும் தாக்க முடியாது. அதிலும் சுடுவது உச்சக்கட்டம். சாதாரணமாக அடிப்பது கூட கூடாது. எனவே இதை காவல்துறை ஒரு படிப்பினையாக எடுத்து, அதற்கேற்ப வருங்காலங்களில் நடந்துகொள்ள வேண்டும்.
எங்கள் மாவட்ட செயலாளர் அசோக் ஒரு பள்ளிக்கூடத்தை தத்தெடுத்து ஒரு அரசுப் பள்ளியின் வகுப்பறையை முழுமையாக மாற்றி அதை ஒரு மாடல் கிளாஸ் ரூமாக மாற்றி இருக்கிறார். அரசாங்கம் அதனைப் பின்பற்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்கூடத்திலும் வகுப்பறைகளை மாற்றியமைக்க வேண்டும். நேற்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பள்ளி வகுப்பறைகளை கட்டுவதற்கு கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருந்தார். அந்த வகுப்பறைகள் எல்லாம் நல்ல மாடர்ன் வகுப்பறைகளாக இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். பாட்டாளி மாடல் வகுப்பறைகளை அதற்கு முன்னோடியாக தமிழக முதல்வர் அதை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றார்.