புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகத்திற்கு உட்பட்டது அணவயல் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த பல வருடங்களாக புளிச்சங்காடு கைகாட்டி கடைவீதியில் பேராவூரணி சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் மாடியில் ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் கடை நடத்தி வருகிறார்.
தற்போது தீபாவளி விற்பனைக்காக பல பகுதிகளில் இருந்தும் பல லட்ச ரூபாய் மதிப்பில் உடைகள் கொள்முதல் செய்து கொண்டு வந்து கடையில் வைத்துள்ளார். நேற்று (29.08.2024) அப்பகுதியில் மழை பெய்த நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கடையை மூடிவிட்டு கடையில் இருந்தவர்கள் சென்று விட்டனர். இன்று (30.08.2024) காலையில் பூட்டப்பட்ட கடைக்குள்ளிருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கும் கடை உரிமையாளர் பாஸ்கருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து கடையைத் திறந்து பார்த்த பாஸ்கர் அதிர்ச்சியடைந்து அப்படியே அமர்ந்துவிட்டார். காரணம் பல லட்ச ரூபாய் மதிப்பிலான அத்தனை ஆயத்த உடைகளும் எரிந்து நாசமாகி இருந்தது. மேலும் கடையில் உள்ள பொருட்களும் எரிந்து கிடந்தன. அதோடு துணிகளில் தீ எரிந்து கொண்டிருண்ட்தால் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வடகாடு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். தீபாவளி விற்பனைக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.