திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் நடுநிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 250க்கும் அதிகமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். சுமார் 8 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். அரையாண்டு, தேர்தல் விடுமுறைகளுக்கு பின்பு ஜனவரி 6ந்தேதி காலை தான் பள்ளி திறக்கப்பட்டது. மாணவ – மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்திவந்துள்ளனர். இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சத்தமாக போட்டுக்கொண்ட சண்டை அக்கம் பக்க வீடுகள் மற்றும் கடைகளுக்கும் கேட்டுள்ளது.
இந்த சண்டையால் பிள்ளைகள் வகுப்பில் உட்காராமல் வெளியே வந்து விளையாடிக்கொண்டுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் கோபமாகினர். அவர்களிடம் சமாதானமாக போகச்சொல்லியும் போகாததால் விரக்தியாகி மக்கள் அனைவரையும் வெளியேற்றி பள்ளிக்கு பூட்டுப்போட்டுவிட்டனர். இந்த தகவல் பள்ளிகல்வித்துறையின் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அழைத்ததன் பேரில் பள்ளி ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து கிளம்பி சென்றனர். பள்ளி பிள்ளைகள் அங்கேயே விளையாடிக்கொண்டு இருந்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.