வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி பயணிகள் ஆட்டோ திருடு போவதாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், இன்று சத்துவாச்சாரி காவல் நிலைய போலீஸார், பிள்ளையார் குப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி விசாரணை செய்தபோது, ஆட்டோவை ஓட்டி வந்த மாதனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ்(38) என்பவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்த நிலையில் ஆட்டோவை திருடி வந்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் ஆட்டோவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கோவிந்தராஜை சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்து டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் தொடர் விசாரணை மேற்கொண்டதில், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 12-ஆட்டோக்களைத் திருடியதாகவும், அந்த ஆட்டோக்களை கருகம்பத்தூர் பகுதியில் பதுக்கி வைத்து, ஆட்டோவின் நம்பர் பிளேட்டை மாற்றியும், புதுப்பித்தும் வேறு மாவட்டங்களில் விற்பனை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து பதுக்கி வைத்திருந்த ஆட்டோக்கள் விற்பனை செய்யப்பட்ட ஆட்டோகள் என 12 ஆட்டோக்களை பறிமுதல் செய்த வேலூர் சத்துவாச்சாரி காவல்துறையினர் ஆட்டோ திருடிய கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.