திருப்பத்தூர் மாவட்ட அமமுக மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்தவர் திருப்பத்தூர் நகரம், கவுதம்பேட்டையைச் சேர்ந்த 30 வயதான வானவராயன். இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். வானவராயன் பைனான்ஸ் வைத்து வட்டி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே தொழில் முன்விரோத தகராறு இருந்துள்ளது. இதனால் இரண்டு குடும்பத்தினரும் அடிக்கடி வாய் சண்டை போட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி இரவு, பைனான்ஸியர் வானவராயன், வட்டி வசூலித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். இரவு 8 மணியளவில் பூங்காவனத்தம்மன் கோயில் முன்பு வானவராயன் வாகனத்தை 6 பேர் கொண்ட கும்பல் மறித்துள்ளது. பின்னர் வண்டியைக் கீழே போட்டுவிட்டு வானவராயன் தப்பி ஓடியுள்ளார். ஆனால் அந்தக் கும்பல் வானவராயனை விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது. வானவராயன் குடும்பத்தினர் சங்கர் வீட்டை சூறையாடியுள்ளனர்.
காவல்துறை அதனைத் தடுத்து நிறுத்தி, கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, பின்னர் கைது செய்ய உத்தரவிட்டார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார். கொலை செய்த குற்றத்தில் பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த தாமஸ், அம்பிரேஸ் ஆகிய இருவரும் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடப் பார்த்ததாகவும், அப்போது படிக்கட்டில் கால் இடறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டுவிட்டது என்றும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடிப்பட்ட அவர்களுக்கு மருத்துவமனையில் மாவுக்கட்டு போட்டு பாதுகாப்பாக சிகிச்சை அளித்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.