தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான தீவிர கண்காணிப்பு பணிகளைத் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி, வேட்பாளர் தேர்வு என தீவிரமாக இயங்கி வருகின்றன. ஆவணமின்றி ரொக்கமாகக் கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலை ஒட்டி, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழக தலைநகர் சென்னையில் 2,700 க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அதில் 500 துப்பாக்கிகள், வங்கி போன்ற நிறுவனங்களுக்குப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளன. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தை அணுகி, தேர்தல் தேதிக்கு முன்பாக அவற்றை ஒப்படைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.