மோசடி புகாரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர துணை செயலாளர் காயத்ரியை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் பச்சைப்பட்டியைச் சேர்ந்தவர் காயத்ரி (43). விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர துணை செயலாளராக இருக்கிறார். இவர் சமூக நலத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருவதாகக் கூறியும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் வசூலித்துக் கொண்டு மோசடி செய்ததாக புகார்கள் குவிந்தன.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருடைய கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் ஜெய்சல்குமார், சேலம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
இதையடுத்து காயத்ரியை அக். 26ம் தேதி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி செய்த பணத்தில் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளாரா? இதில் அரசியல் பின்னணி உள்ளதா? சென்னையில் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்?, தனிப்படை காவல்துறையினரின் நடவடிக்கைகளை உளவறிந்து அவருக்கு தகவல் சொன்னவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விசாரணையில் விடை கிடைக்கும் என காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் மீது மேலும் சிலர் மோசடி புகார்கள் கொடுத்துள்ள நிலையில், இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.