காவல் நிலையத்தில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவியர்களில் காவல்துறை அதிகாரியாக வருவேன் என கூறிய பள்ளி மாணவியர்களை தனது நாற்காலியில் அமர்த்தி காவல் ஆய்வாளர் ஒருவர் அழகு பார்த்த நிகழ்வு திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சின்னாளபட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் பேசிய வன்கொடுமை தடுப்பு பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், மாணவர்களிடத்தில் படித்த பின்பு நீங்கள் எந்த வேலைக்கு தேர்வு செய்து படிக்க போகிறீர்கள் என கேள்வி கேட்டார். அப்போது மாணவர்கள் சிலர் தங்கள் காவல்துறை மற்றும் மருத்துவம் உட்பட பல துறைகளை கூறினார்கள். காவல்துறை தேர்வு செய்த மாணவர்களை பாராட்டிய காவல் ஆய்வாளர் வெங்கடாசலம், வருங்காலத்தில் நீங்களும் இதுபோல் சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய இடத்திற்கு வர வேண்டும் எனக் கூறியதோடு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ., எழுத்தர், போலீஸ் ஆகியோரின் பணிகள் புகார் மனு தொடர்பாக போலீஸ் நடவடிக்கை குறித்து இன்ஸ்பெக்டர் விளக்கினார். நிறைவாக காவல்துறையை தேர்வு செய்த மாணவ, மாணவிகளை தனது இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார். அப்போது அங்கிருந்த மாணவ-மாணவியர்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். விழிப்புணர்வு முகாமில் சின்னாளபட்டி சார்பு ஆய்வாளர்கள் கோமதி, டேவிட், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஜெயக்குமார், ரவிமுருகன், பாலசுப்ரமணி, நல்லதம்பி, பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயசேகர், தலைமைக் காவலர்கள் உமா, ஜெயபாலா, முதல் நிலை காவலர்கள் பாப்பாத்தி, ஜெயப்ரியா மற்றும் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேலாளர் பாரதிராஜா, சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.