பெரம்பலூர் மாவட்டத்தில் பெருமளவில் கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கற்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்காக, அப்பகுதியில் உள்ள மலைகள் உடைக்கப்படுகின்றன. கனிம வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குவாரிகளில் முறையாக அனுமதி பெற்றும், பெற்ற அனுமதியை மீறியும் பல கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவைகளைக் கண்டும் காணாமல் இருப்பதற்கு அதிகாரிகளுக்கு வேண்டிய கவனிப்புகள் செய்யப்படுகின்றன. இதனால் அதிகாரிகள் கல்குவாரி முதலாளிகளுக்கு உடந்தையாக உள்ளனர். அதே போல் இந்த கல் குவாரிகளில் இருந்து தினசரி பல நூற்றுக்கணக்கான லாரிகள் கற்கள் ஏற்றிச் செல்கின்றன.
அந்த லாரிகளில், டெம்போக்களில் அளவுக்கு அதிகமாகவும் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகவும் அவைகள் மீது வழக்குகள் போடாமல் இருப்பதற்காகவும் காவல்துறை, போக்குவரத்து துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளும் அன்போடு கவனிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் அருகிலுள்ள கோனேரிப்பாளையம் பகுதியில் பெரம்பலூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கல்குவாரி எடுத்து நடத்தி வருகிறார். இவரது கல்குவாரியில் இருந்து கற்கள் ஏற்றிக் கொண்டு லாரிகள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றன. பெரம்பலூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ளவர் பால்ராஜ். இவர் செந்தில்குமாருக்கு சொந்தமான லாரிகளில், ஓவர் லோடு ஏற்றிச் செல்வதாக இன்ஸ்பெக்டர் பால்ராஜ் கவனத்திற்கு போலீஸ்கார் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து ஓவர் லோடு லாரிகள் மீது வழக்குப் போடாமல் இருப்பதற்காக செந்தில்குமார் தரப்பிடம் இருந்து இன்ஸ்பெக்டர் பால்ராஜ் லஞ்சமாக 50,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
இதையடுத்து இன்று செந்தில்குமார் கல்குவாரியில் பணி புரியும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்பவர் இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் லஞ்சப் பணம் 50,000 ரூபாய் கொடுக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் அவரை சுற்றிவளைத்துக் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவர் லஞ்சமாகப் பெற்ற 50,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் பால்ராஜை தனி அறையில் வைத்து அவரிடம் நீண்ட நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்ஸ்பெக்டர் பால்ராஜை சிறையில் அடைத்துள்ளனர். கல்குவாரி முதலாளியிடம் 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.