மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் சுர்ஜித் அங்குள்ள பழைய ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து 70 மணி நேரங்களைக் கடந்தும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தீபாவளியை கொண்டாட மனமில்லாத மக்கள் சுர்ஜித் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனைகளை செய்து வருகின்றார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பழைய பயன்படுத்தப்படாத ஆழ்குழாய் கிணறுகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் அதற்கான உத்தரவுகளை போட்டுள்ளனர்.
ஆனால் பல இடங்களில் இளைஞர்களே தன்னிச்சையாக முன்வந்து ஆழ்குழாய் கிணறுகளை மூடிக் கொடுக்க முன்வந்துள்ளனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள கல்லாலங்குடியில் தரைமட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த ஊராட்சி ஆழ்குழாய் கிணற்றை மூட வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்த நிலையில் உடனடியாக மூட திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் கோகுலகிருஷ்ணன் உத்தரவிட்டதுடன், இரவிலேயே மூடினார்கள்.
அதே போல அன்னவாசல் பகுதியில் பயனற்ற பழைய ஆழ்குழாய் கிணற்றை கண்டறிந்து அன்னவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீரமணி மூடினார்.
வடகாடு காவல் நிலைய ஆய்வாளர் பரத் சீனிவாசன் இன்று கிராமம் கிராமமாகச் சென்று பழைய ஆழ்குழாய் கிணறுகள், பயனற்ற கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூட கிராம மக்களிடம் பேசி வலியுறுத்தி வருகிறார்.
அணவயல் அரசுப் பள்ளி வளாகத்தில் மூடப் படாமல் உள்ள பழைய ஆழ்குழாய் கிணற்றில் தற்காலிகமாக சாக்குகளை கொண்டு மூடியதுடன் அதன் மீது பாறைகளை வைத்தவர் புள்ளாண்விடுதி, கருக்காகுறிச்சி, உள்பட பல கிராமங்களுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் ஆழ்குழாய் கிணறுகளை மேலே மூடி மழை நீர் சேகரிப்பிற்கு பயன்படுத்த கூறியுள்ளேன். தொடர்ந்து கண்காணித்து விரைந்து பணிகளை முடிப்போம் என்றார் அவர்.
இதே போல அனைத்து கிராமங்களிலும் முயற்சி மேற்கொண்டால் எதிர்காலங்களில் சுர்ஜித்க்கு ஏற்பட்டுள்ள சம்பவம் போன்றவற்றை தவிர்க்கலாம்.