கடந்த 24 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளே இந்திலி கிராமத்தில் டூவீலர் திருடு போனது சம்பந்தமாக சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் விசாரணைக் கைதிகளாக நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறையில் இருந்த அவர்களை, சின்னசேலம் போலீசார் விசாரணைக்காக அழைத்துவந்தனர். அப்படி வரும்போது, விசாரணைக் கைதிகளில் ஒருவரான சக்கரவர்த்தி, ஆத்தூர் பஸ் நிலையம் அருகே, சிறுநீர் கழிப்பதாகக் கூறி விட்டு காவலுக்கு உடன்வந்த போலீஸ்காரர்களை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய சக்கரவர்த்தியை சின்னசேலம் மற்றும் சேலம் மாவட்ட போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டில், சக்கரவர்த்தி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அங்கு சென்று சக்கரவர்த்தியை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். தப்பி ஓடிய விசாரணைக் கைதியை மீண்டும் தேடிப் பிடித்து போலீசார் கைது செய்துள்ள சம்பவம், போலீசார் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.