வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.க்கும், பெண் காவலருக்கும் ஏற்பட்டுள்ள நீயா? நானா? மோதல் விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உண்மையில், இந்த காவல்நிலையத்தில் என்னதான் நடக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க, ஆய்வாளர், காவலர்களை வரும் திங்கள்கிழமை (ஜூலை 4) நேரில் ஆஜராகும்படி எஸ்.பி. அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவர் மல்லிகா (வயது 49). இதே காவல்நிலையத்தில் கிரேடு&1 காவலராகப் பணியாற்றி வருகிறார் சசிகலா (வயது 38).
பெண் காவலர் சசிகலா, துறை ரீதியான பணிகளை சரிவர செய்வதில்லை; உயர் அதிகாரிகள், சக காவலர்கள், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் ஆகியோரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக எஸ்.ஐ., மல்லிகா, மாவட்ட எஸ்பிக்கு, கடந்த மே மாதம் ஓர் அறிக்கை சமர்ப்பித்து இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வாழப்பாடி உள்கோட்ட காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''பெண் காவலர் சசிகலா, வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பணியில் சேர்ந்தார். ஒரே மாதத்தில் அவருக்கும் மல்லிகா எஸ்.ஐ.க்கும் ஏழாம் பொருத்தம் ஆகிவிட்டது.
கடந்த ஆண்டு செப்., மாதம் போக்சோ வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார் சசிகலா. எல்லா பணிகளும் முடிந்த பிறகு அதிகாலை 02.30 மணியளவில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் பகல் அவரை தொடர்பு கொண்ட மல்லிகா எஸ்.ஐ., டி.எஸ்.பி. போனில் பேசினால், நாம் இருவரும் சேலம் ஜி.ஹெச்சில் இருப்பதாகச் சொல்லிவிடு என சொல்லி இருக்கிறார். ஆனால், டி.எஸ்.பி. அவருடைய செல்போன் லைனில் வந்து விசாரித்தபோது, தான் வீட்டில் இருப்பதாக சசிகலா உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். இதையறிந்த மல்லிகா எஸ்.ஐ., நான் சொன்னதுபோல் டி.எஸ்.பி.யிடம் சொல்லாமல் எதற்காக மாட்டிவிட்டீங்க? அவருடைய ஃபோனை எடுக்காமல் விட்டிருக்கலாமே... நான்தான் இப்போது மாட்டிக்கொண்டேன்... எனச் சொல்லி இருக்கிறார். இங்குதான் எஸ்.ஐ.க்கு., சசிகலா மீது முதல் மோதல் ஏற்பட்டது.
அடுத்த இரண்டு நாளில், வாழப்பாடி (ச/ஒ) காவல்நிலையத்தில் நடந்த 'ரோல் கால்' நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. முத்துசாமி கலந்து கொண்டார். அதில், வாழப்பாடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி, எஸ்.ஐ., மல்லிகா, காவலர்கள் சசிகலா, மேனகா, சங்கீதா ஆகியோரும் ஆஜராகினர்.
அப்போது, டி.எஸ்.பி. முத்துசாமி, பகிரங்கமாகவே மல்லிகா எஸ்.ஐ.யை திட்டியுள்ளார். நீங்கள் முதலில் எஸ்ஐக்கான பணியைச் செய்யுங்கள். என்னுடைய ஃபோனை எடுக்காமல் விட்டுவிடும்படி எதற்காக காவலர் சசிகலாவிடம் சொன்னீங்க? எனக்கேட்டு காச்மூச் என்று சத்தம் போட்டுள்ளார். உங்களுக்கு பர்மிஷன் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள்... உங்களுக்கு நீங்கள் நடத்தும் பேக்கரியில் வேலை இருந்தால் தாராளமாக போய்ப் பாருங்கள் என்றவர், ஆய்வாளர் தனலட்சுமியிடம், நீங்களும் உங்கள் பைனான்ஸ் கம்பெனி வேலையைப் பாருங்கள் என்று திட்டியுள்ளார்.
எல்லா காவலர்கள் முன்பும் டி.எஸ்.பி. இப்படி திட்டியதற்கு சசிகலாதான் காரணம் எனக் கருதி, அவர் மீது மேலும் அதிருப்தி அடைந்தார் மல்லிகா. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர், அடுத்த ஓரிரு நாளில் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் நடப்பு ஆண்டு, பிப்., 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாள்கள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிக்குச் சென்றிருந்த காவலர்கள் சசிகலாவும், சங்கீதாவும் எஸ்.ஐ.யிடம் அனுமதி பெறாமல் ஓய்வுக்குச் சென்றுவிட்டனர்.
அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் வைரமணி என்பவரிடம் சொல்லிவிட்டுதான் அவர்கள் ஓய்வுக்குச் சென்றிருந்தனர். இது நடைமுறையில் உள்ளதுதான். ஆனாலும் தன்னிடம் சொல்லவில்லை எனக்கூறி, சசிகலாவை மட்டும் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகச் சொன்னார் மல்லிகா எஸ்.ஐ. ஆனால் சங்கீதாவை மட்டும் அவர் ஏதும் சொல்லவில்லை.
தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சசிகலா, அங்கு ஒன்றரை மணி நேரம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் டி.எஸ்.பி. முத்துசாமி, உன்னை மீண்டும் பணிக்கு அழைத்துக் கொள்ள வேண்டுமானால் தன்னிச்சையாக ஓய்வுக்குச் சென்று விட்டதாக எழுதிக் கொடுக்கும்படி கூறியுள்ளார். கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட சசிகலா, டி.எஸ்.பி. சொன்னபடியே எழுதிக் கொடுத்துவிட்டு பணிக்குத் திரும்பி இருக்கிறார்.
உயர் அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்தும், வாழ்வாதாரம் கருதியும் அவர் எழுதிக் கொடுத்த விளக்கக் கடிதத்தைதான் மல்லிகா எஸ்.ஐ., சசிகலாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக பயன்படுத்தி, அறிக்கை அளித்திருக்கிறார்,'' என புட்டு புட்டு வைக்கின்றனர் காவல்துறையினர்.
மல்லிகா எஸ்.ஐ.யின் ஈகோ குறித்தும் காவலர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். வாழப்பாடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி, முதலில் காவலராகதான் பணியில் சேர்ந்தார். பின்னர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று 2008- ஆம் ஆண்டு எஸ்.ஐ. ஆனார். தற்போது இன்ஸ்பெக்டராக உள்ளார். 1991- ல் காவலராக பணியில் சேர்ந்த மல்லிகா, தற்போது எஸ்.ஐ. ஆக உள்ளார். தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் ஜூனியராக உள்ளதாலேயே தனலட்சுமியை மேடம் என்று இதுவரை அழைத்ததில்லை.
தன்னை மேடம் என்று அழைக்க வேண்டும் என்று ஆய்வாளர் தனலட்சுமி கூறியபோது, அப்படி அழைக்கும்படி அரசாணை ஏதும் இருக்கிறதா? என தடாலடியாக கேட்டு அவரை வாயடைத்துவிட்டார். இதனால் நொந்து போன தனலட்சுமி, நான் காவல்நிலையத்தில் இருக்கும்போது மல்லிகாவை யாரும் மேடம் என்று அழைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
ஒருமுறை, போக்சோ வழக்கு ஒன்றில், குற்றவாளியின் பெயரை மாற்றி எழுதி, எப்ஐஆர் பதிவு செய்து விட்டார் மல்லிகா. இவர் செய்த தவறுக்கு, ஆய்வாளர் தனலட்சுமிக்கு தமிழ்நாடு காவலர் சார்நிலைப் பணியாளர்கள் விதிகள் 1956, பிரிவு 3 (ஏ)ன் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள் காவல்துறையினர்.
மல்லிகா எஸ்.ஐ., மேடம் என்று அழைக்காதது குறித்து ஆய்வாளர் தனலட்சுமியிடம் கேட்டபோது, ''சார்... வயதிலும், சர்வீஸிலும் அவர்தான் சீனியர். அவர் மேடம்னு கூப்பிடாததைப் பற்றி நான் பெரிசா எடுத்துக்கல. மத்தபடி எதுவும் இல்லைங்க சார்... அவர் கேப் அணிந்துதான் வணக்கம் செலுத்துவார்... மத்தபடி ஒண்ணுமில்லீங்க சார்...,'' என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
வாழப்பாடி மகளிர் காவல்நிலைய விவகாரங்கள் குறித்து, அப்போதைய டி.எஸ்.பி. முத்துசாமியிடம் கேட்டபோது, ''மகளிர் காவல்நிலைய விவகாரங்களை எல்லாம் அங்குள்ள இன்ஸ்பெக்டர் பார்த்துக் கொள்வார் என்பதால், அதை பெரிதாக கண்டுகொள்தில்லை.
காவலர் சசிகலா மீது ரிப்போர்ட் வந்தது. அவங்களும் கொஞ்சம் சரியில்லீங்க சார். மறுபடி மறுபடி அவர் மீது ஏதோ பிரச்னை வந்துகொண்டே இருந்தது. அவர் கரெக்டாக டூட்டிக்கு வர்றதில்ல.... போறதில்லனு புகார் இருக்கு. நாங்களே அதுபற்றி 3 மாதம் கழித்துதான் ரிப்போர்ட் அனுப்பி இருக்கோம். அது விசாரணையில் இருக்கு சார்...,'' என்றார்.
இது ஒருபுறம் இருக்க, வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க, ஆய்வாளர் தனலட்சுமி, காவலர்கள் மேனகா, வைரமணி ஆகியோரை வரும் திங்கள்கிழமை (ஜூலை 4) நேரில் ஆஜராகும்படி எஸ்.பி. அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மல்லிகா எஸ்.ஐ. மற்றும் காவலர் சசிகலா ஆகியோரிடையேயான மோதல் விவகாரம் குறித்து விசாரித்து, விரிவான தனி அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காவலர் சசிகலாவிடம் கேட்டபோது, ''எனக்கு இடப்பட்ட பணிகளை சரியாகத்தான் செய்து வருகிறேன். கடந்த 9 மாதத்திற்கு முன்பு, குறிப்பிட்ட ஓரிடத்தில் பணியில் இல்லாமலேயே தான் அங்கு பணியில் இருப்பதாக டிஎஸ்பியிடம் சொல்லச் சொன்னார் எஸ்.ஐ. மல்லிகா. நான் பொய் சொல்ல விரும்பாமல் உள்ளதை உள்ளபடி சொன்னேன். அங்கு ஆரம்பித்த வன்மம்தான் என் மீது அவர் தொடர்ந்து உயர் அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை அளித்து வருகிறார். மேற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பாக நான் எதுவும் பேச விரும்பவில்லை,'' என்றார்.
சசிகலா மீதான குற்றச்சாட்டு குறித்து, எழுத்து மூலம் உரிய விளக்கம் அளிக்கும்படி அவருக்கு எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், ஜூன் 23- ஆம் தேதி, குற்றச்சாட்டு குறிப்பாணை அளித்துள்ளார்.
வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.க்கும், காவலருக்கும் ஏற்பட்ட மோதல்தான் தற்போது சேலம் மாவட்டக் காவல்துறையில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.